சுதந்திர போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பங்கேற்றதா? – பேராசிரியர் ராம் புனியானி


கடந்த சில ஆண்டுகளில் பிஜேபி அபரித வளர்ச்சி பெற்று வரும் நிலையில், அதன் தாய்க் கழகமான RSS குறித்து அவ்வப்போது பொது வெளியில் விவாதிக்கப் படுகிறது. RSS சித்தாந்தவாதிகள், தமது இயக்கமானது, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகப்பெரிய பங்களிப்பு செய்ததாக அவ்வப்போது பேசி வருகின்றனர்.


மகாராஷ்டிரா சட்டசபையில் ஆளுநர் உரைக்கு பதிலளிக்கும் போது, முதல்வர் உத்தவ் தாக்கரே, " RSS சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்ததே இல்லை. வெறுமனே பாரத் மாதாகீ ஜெய் என்று கோஷமிடுவதே உங்களை தேசபக்தராக்கி விடாது" என பேசியது மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது.




முன்னாள் முதல்வர் பட்னாவிஸ், " RSS - ஐ உருவாக்கிய ஹெட்கேவர் சுதந்திர போராட்ட வீரர்" என்று தாக்கரேவுக்கு பதிலளித்தார்.

பட்னாவிஸ் கூறியதில் ஓரளவு உண்மையுள்ளது. RSS நிறுவனரான ஹெட்கேவர், 1920 - ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்து ஓராண்டு சிறையில் இருந்தார். 1925-ல் RSS இயக்கத்தை உருவாக்கிய பின்பும் இரண்டு தருணங்களில் இந்திய தேசிய இயக்கத்துடன் ஓரளவு இணைந்து செயல்பட்டார். எனினும் அப்போது தனது இந்து தேசியவாதத்தை வெளிப்படுத்தியதால் இந்திய தேசிய வாதத்துடனான அவரது வேறுபாடுகள் தெளிவாகத் தெரிந்தன.

சம்சுல் இஸ்லாம் என்பவர், "1929- ல் லாகூர் காங்கிரஸ், பொதுமக்கள் அனைவரும் ஒவ்வொரு ஜனவரி - 26 அன்றும் மூவர்ணக் கொடியை ஏந்த விடுத்திருந்த அழைப்பில் ஹெட்கேவர் கலந்து கொள்வதாக எங்களுக்கு தகவல் வந்தது. அதேசமயம், அவரது அறிவுறுத்தலின் படி RSS இயக்கமானது இதில் பங்கேற்க வில்லை. மேலும் ஜனவரி 21, 1930 ல் அவர் அனைத்து ஷாகாக்களும் மூவர்ணக் கொடிக்கு பதிலாக காவிக்கொடியை ஏற்றுமாறு ஆணையிட்டார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, 1930-ல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் அவர் தனிப்பட்ட முறையில் பங்கேற்று சிறைக்கு சென்றதும் உண்மைதான்.C. P. பிஷுகர் எழுதிய ஹெட்கேவரின் வாழ்க்கை வரலாற்று நூலில், " சங்கம், உப்பு சத்யாகிரகத்தில் பங்கேற்கக் கூடாது" என ஹெட்கேவர் உத்தரவிட்டதை சுட்டிக் காட்டுகிறது. பிறகு எதற்காக அவர் மட்டும் பங்கேற்றார். அவரது நோக்கம் தேசிய இயக்கத்துக்கு பலம் சேர்ப்பதற்கு அல்ல. மாறாக, அதில் பங்கேற்கும் சுதந்திரத்தை நேசிக்கக் கூடிய, அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட மதிப்பு மிக்க மக்களிடம் சங்கத்தைப் பற்றி விளக்கி அவர்களின் ஆதரவைப் பெறுவதற்காகவே என அந்த நூலிலேயே குறிப்பிடப் பட்டுள்ளது.

ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த மிகப்பெரிய போராட்டத்தின் போது, கோல்வால்கர், RSS - ன் ஷாகாக்கள் அவர்களது வழக்கமான பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். நமது எந்த செயலும் பிரிட்டிஷாரை எரிச்சலடைய வைக்கக் கூடாது என்றார். மேலும் அவரது எண்ணங்களின் தொகுப்பில், சுதந்திரப் போராட்டத்தை " பிராந்திய தேசியவாதம்" என கண்டிக்கிறார்.

ஆக, இந்து தேசியவாதம் என்ற கருத்தியலின் அடிப்படையில், இந்து ராஷ்டிராவை கட்டியமைக்கும் கடமை தங்களுக்கு உள்ளதாக அவர்கள் நினைத்தனர். ஹெட்கேவர், காங்கிரஸ் காரராக சிறைக்கு சென்றாரே தவிர, RSS காரராக அல்ல. RSS இந்திய தேசியத்தை உருவாக்க நினைத்த சுதந்திரப் போராட்டத்துக்கு எதிராகதான் நின்றது.

1998 தேர்தலின்போது வாஜ்பாய், தான் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்ததாக குறிப்பிட்டார். இதைப் பற்றிய விசாரித்த போது, அவரது சொந்த கிராமமான பட்டேஷ்பரில் நடந்த ஊர்வலத்தின் இறுதியில் சென்றதாகவும், கைது செய்யப்பட்டவுடன், தனக்கும் போராட்டத்துக்கும் சம்பந்தமில்லை என மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து வெளியில் வந்ததும் தெரிய வந்தது. இவரது முன்னோடி சாவர்க்கரும் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட போது பல மன்னிப்புக் கடிதங்கள் எழுதி விடுதலை அடைந்ததும் வரலாற்றில் உள்ளது.

RSS - ன் நோக்கம் இந்து ராஷ்ட்டிரமாக இருப்பினும், தேர்தலை மனதில் கொண்டு RSS இந்திய தேசியத்துக்கான சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது எப்படியாவது காண்பிக்க இப்போது முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் அவை உண்மைக்கு வெகு தொலைவில் உள்ளன.

- பேராசிரியர் ராம் புனியானி

(தொடர்ந்து மோடி அரசை கடுமையாக விமர்சித்து வரும் மிகச் சிலரில் பேராசிரியர் ராம் புனியானியும் ஒருவர். பகுத்தறிவாளராகவும், இந்துத்துவ பரிவாரங்களின் வன்முறைகளை விமர்சித்து எழுதுகிறவராகவும் உள்ள ராம் புனியானிக்கு தொடர்ந்து இந்துத்துவ குண்டர்களின் மிரட்டல் வந்த வண்ணம் இருக்கிறது. இருப்பினும் தொடர்ந்து எழுதிவருகிறார்.)

- மொழிபெயர்ப்பாளர் : குரு

https://countercurrents.org/.../rss-and-freedom-movement.../ கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்!

Comments

Popular posts from this blog

உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு. பாகம்_3

இலட்சத்தீவுகள் : குரங்கு கையில் பூமாலை!