ஹத்ராஸ் வழக்கு: சித்திக் கப்பன், 7 பேர் மீது உ.பி. காவல்துறை 5,000 பக்கக் குற்றப் பத்திரிகை
#ஹத்ராஸ் வழக்கு: பத்திரிகையாளர் சித்திக் கப்பன் மற்றும் 7 பேர் மீது உ.பி. காவல்துறை 5,000 பக்கக் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது.
தில்லியில் இருந்து 200 கி.மீ தொலைவில் இருக்கிறது உத்திர பிரதேசத்தில் இருக்கும் ஹத்ராஸ் பகுதி. கடந்த செம்டம்பரில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த நால்வரால் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும் கொடூரமாகவும் தாக்கப்பட்டார். பிறகு ஐந்தாம் நாளில் இறந்தார். இறப்பதற்கு முன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் யார் யார் என வாக்குமூலம் கொடுத்தார். இந்த வழக்கு இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்டு போராட்டங்கள் துவங்கியதும், உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்காமல் போலீசே இரவோடு இரவாக எரித்தது.
இந்த நிகழ்வு சம்பந்தமாக கேரள பத்திரிக்கையாளர்கள் நால்வர் செய்தி சேகரிக்க உத்திரப் பிரதேசம் சென்றனர். ”அறிய கூடிய குற்றம் செய்யும் நோக்கத்தோடு” (சாதி வன்முறையைத் தூண்ட சதி செய்ய சென்றதாக) தேச துரோக வழக்கு போட்டு உ.பி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெயில் மனு போட்டாலும் நீதிமன்றம் மறுத்தது. கேரள பத்திரிக்கையாளர் சங்கம், வழக்கறிஞர்கள், சொந்த குடும்பத்தினர் சிறையில் இருப்பவர்களை சந்திக்க அனுமதிக்கேட்டாலும் நீதிமன்றம் அராஜகமாக மறுத்தது.
இந்த சூழ்நிலையில் தான் கப்பன் மற்றும் பிறர் தோஹா மஸ்கட்டில் உள்ள நிதி நிறுவனங்களிடமிருந்து சுமார் ரூ .80 லட்சம் நிதி பெற்றதாக உ.பி. போலீசார் பொய்யான குற்றச்சாட்டைக் கூறியுள்ளனர்.
கப்பனைத் தவிர, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா-வின் உறுப்பினர்களான அதிகுர் ரஹ்மான், மசூத் அகமது, ரவூப் ஷெரீப், அன்சாத் பத்ருதீன், ஃபிரோஸ்கான், ஆலம் மற்றும் டேனிஷ் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது.
கப்பனும் மற்றவர்களும் தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் கப்பனும் மற்றவர்களும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மடிக்கணினிகள் மற்றும் மொபைல் போன்களில் இருந்து ஆதாரங்கள் திரட்டப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
”கப்பன் மற்றும் பிறருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தெளிவற்றவை, ஆதாரமற்றவை மற்றும் மாநில அரசாங்கத்தின் கருத்தைப் பிரச்சாரம் செய்வதற்காக பொய்யாக கூறப்பட்டவை, மேலும் சிறையிலும் அவர்கள் சித்திரவதை செய்யப்படுகின்றனர்" என கப்பனின் வழக்கறிஞர் மதுவன் தத் சதுர்வேதி தெரிவித்தார்.
கடந்த 2010 துவங்கி டிசம்பர் 31, 2020 வரைக்குமான காலத்திற்குள் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்தின் செயல்களை விமர்சனம் செய்தற்காக 144 பேர் மீது தேசதுரோக வழக்கு போட்டுள்ளனர். குறிப்பாக, ஹத்ராஸ் வழக்கு சம்பந்தமாக மட்டும் 22 தேசதுரோக வழக்குகள் போட்டிருக்கிறார்கள். (ஆதாரம் : Article 14 என்ற சட்ட செய்தி இணையத்தளம்)
இது எங்களது இந்துத்துவ ராஜ்யம். என்ன வேண்டுமென்றாலும் செய்வோம்! யாரும் கேள்விக்கேட்க கூடாது! கேட்டால், இப்படி தான் பல பொய்வழக்குகள், தேசத் துரோக வழக்குகள் போட்டு உள்ளே தள்ளுவோம் என யோகி ஆதித்யநாத் அரசாங்கம் திமிராக நடந்துகொள்கிறது. உத்திரப்பிரதேசத்தை போல தமிழ்நாட்டையும் மாற்றுவதற்கு தான் தமிழ்நாட்டிற்கு வந்து பா.ஜனதா கூட்டணிக்கு இந்துத்துவ பயங்கரவாதி வாக்கு கேட்டு சென்றிருக்கிறார். இனி மக்கள் தான் முடிவு செய்யவேண்டும்.
- நதியா
செய்தி ஆதாரம்: தி ஸ்க்ரால் - 04/04/2021


Comments
Post a Comment