டார்ச்லைட்டு... காவி ஹைடு!!
தமிழ்நாட்டிற்கு வெளிச்சம் தரப்போவதாக சொல்லும் கமலுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கணித்திருக்கின்றன ஊடகங்கள். கோவை தொகுதியில் மாற்றத்தை விரும்பும் மக்கள், கமலுக்கு வாய்ப்பளிப்பார்கள் என்கிறார்கள். இது உண்மையானால் கோவை காவிக்கு கம்பளம் விரித்த குற்றத்திற்கு ஆளாகிவிடும்.
ஏனெனில், கமல் மாற்று அல்ல. ஏமாற்று. பாஜக-வின் முகமூடி. ஹைடாக (Hide) இருக்கும் காவி. பொதுவாக திரையில் பல்வேறு அரிதாரம் பூசி உலக நாயகனாக இருப்பவர் கமல். அவருக்கே ட்ஃப் கொடுக்கிறது பாஜக கும்பல். ஆம். இன்று கமல் போல அரிதாரம்பூசி நம்மிடம் வருகிறது.
போக்கிரி படத்தில், ”எந்த கெட்டப்பு போட்டுட்டு வந்தாலும் கண்டுபிடிச்சிடுறீங்களே, ஆள் வச்சி ஃபாலோ பண்றீங்களா?” ன்னு வடிவேல் கேப்பார். அந்த மாதிரி எந்த வேஷத்துல வந்தாலும் பிஜேபியை ஈஸியா கண்டுபிடிச்சி பொடனில அடிச்சி அனுப்பறதுதான் தமிழ்நாட்டு ஸ்டைல். அதனாலதான் பெரும்பான்மையான கட்சிகள், முற்போக்காளர்கள், அரசியல் நிபுணர்கள், கமல் பிஜேபி-யின் ”பி” டீம் னு ஈஸியா சொல்லிட்டாங்க.பொடனில அடிச்சி அனுப்புற கடமை மக்களான நம்மகிட்ட இருக்கு.
உடனே, அவரை எப்படி பிஜேபியோட ”பி” டீம் னு சொல்லலாம்? அவரு பிஜேபியை கடுமையாக (?) விமர்சிக்கிறாரே... புதுசா வர்றவங்களை என்கரேஜ் பண்றது இல்ல. வாய்ப்பு குடுத்தாதானே நிரூபிக்க முடியும்ன்னு நம்மவர் ஃபேன்ஸ் கேட்கலாம். ஆனா, மொச புடிக்கிற நாய மூஞ்சபாத்தா தெரியாதா? இருந்தாலும், நம்மவர், நாயகர் எப்படி பிஜேபியோட ஃபிட் ஆகறாருன்னு பாத்துடலாம்.
முதலில், மய்யம் என்பதே ஏமாற்றுதான். நடுநிலைவாதின்னு சொல்லிக்கிட்டு பிஜேபிக்கு சொம்படிக்குற ரங்கராஜ் பாண்டே, மாரிதாஸ், தமிழ் பொக்கிஷம் விக்கியோட இதை ஒப்பிட்டு பாக்கலாம். பொதுவாக சமூகத்துல ரெண்டே தரப்புதான். பாதிக்கப்படுறவங்க, பாதிப்பை ஏற்படுத்துறவங்க. இதுல ஏதாவது ஒரு பக்கத்துலதான் நிக்க முடியும். பூனைக்கு நண்பனா இருந்துட்டு பாலை காப்பத்த முடியுமா? அம்பானிக்கும், அதானிக்கும் நண்பனா இருந்துட்டு மக்களுக்காக செயல்பட முடியுமா? இதுவரைக்கும் நட்டமா நிப்போம்னு சொன்னவர், எப்போதாவது நம்ம பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்திருக்காரா? நம்ம போராடினப்போ கூட வந்து நின்னிருக்காரா? இப்போ ஓட்டுக்காக ”மய்யம் மக்கள் பக்கம்னு” டயலாக் விடுறார்.
அடுத்து, கமல் கட்சியின் முக்கியான விசயமாக அவர்களது வேட்பாளர்கள், கட்சியினர் ஏன் கமலே கூறுவது, “திறமைக்கு முன்னுரிமை; திறமை, தகுதி அடிப்படையில் தகுதியான வேலை” என்பதுதான். இங்கேயே தெளிவாக தெரிகிறது அவர்களின் சங்கித்தனம். திறமையை அடிப்படையாகப் பார்க்கும் மனநிலையே ஒரு அபாயகரமான மனநிலைதான்.
நல்ல குழந்தைகள்தாம் நாட்டிற்கு தேவையென்று நோய்வாய்ப்பட்ட குழந்தைகளை கொன்று குவிக்க உத்தரவிட்ட ஹிட்லரின் மனநிலைக்கு சற்றும் குறைவில்லாதது கமலின் மனநிலை. தகுதிக்கும், திறமைக்குமான நாடு என்றுதான் யூதர்களையும், கருப்பர்களையும், கம்யூனிஸ்டுகளையும் கொன்று குவித்தான் ஹிட்லர்.
தகுதியானவர்கள்தான் மருத்துவம் படிக்க வேண்டும் என்று சொல்லி அனிதாவையும், பிரதீபாவையும் இன்னும் பல மாணவர்களையும் கொன்றது மோடி அரசு. அத்தோடு தகுதி, திறமையைக் காரணம் காட்டித்தான் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரைவார்க்கிறது. இன்று கமல் கூறும் தகுதியானவர்களின் உலகமும் இப்படித்தான் இருக்கும்.
இதை கமல் கட்சி வேட்பாளரான சினேகன் ரெட்பிக்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெளிவாக கூறுகிறார். ”நீட்டை ரத்து செய்துவிட்டு, தமிழக மாணவர்களின் பாடத்திட்டத்திற்கேற்ப வேறு ஒரு என்ட்ரன்ஸ் எக்ஸாமை கொண்டு வருவோம்” என்கிறார். அதாவது, நீட் நாளை வேறு பெயரில் அரிதாரம் பூசி வரும். அதுமட்டுமல்ல தகுதியானவனுக்குதான் எல்லாம் கிடைக்க வேண்டுமென்றால், தமது தகுதியை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்காதவன் வாழவே கூடாது என்பதுதான் இதிலுள்ள செய்தி. இது மொத்த பிஜேபி-யின் கருத்தும்கூட.
இதுமட்டுமல்ல தத்துவார்த்த ரீதியாக, மோடி எந்த தரப்பிற்காக இருக்கிறாரோ, அதே தரப்புதான் கமலும். அளவில் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம். மோடி வெறிபிடித்த இத்துத்துவவாதி என்றால் கமல் மைல்டான ஹைடான இந்துத்துவவாதி.
குறிப்பாக,”என் மாப்பிள்ளையிடம் சாதி கேட்க மாட்டேன்” என்று சாதியை மறுப்பவராக காட்டிக் கொள்கிறார் கமல். தமது கட்சி உறுப்பினர் படிவத்திலும் சாதி குறிப்பிடவில்லை என பெருமை பேசுகிறார். ஆனால், படிவத்தில் இல்லாத சாதி அவர் மனதில் அழுத்தமாக படிந்திருக்கிறது. அதனால்தான் இடஒதுக்கீடு வேண்டாம் என கூறினார். இது பல கேள்விக்கணைகளை எதிர்கொண்டதும், இடஒதுக்கீடு தேவை. ஆனால், சாதியைக் குறிப்பிடாமல் இருப்பது சாதியை அழிப்பதற்கான தொடக்கம் என தெளிவாக குழப்புகிறார். மறந்தும்கூட உயர்சாதி பார்ப்பனர்களுக்கான 10% இடஒதுக்கீட்டையும் எதிர்க்கவில்லை.
உண்மையில், இடஒதுக்கீட்டை வேண்டாம் என கருதுபவர்தான் கமல். அதனால்தான் இடஒதுக்கீடு பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க திணறுகிறார்கள் அல்லது மறுக்கிறார்கள் இவரது கட்சியினர். EIA-2020 யை எதிர்த்துப் பேசி பிரபலமான கமல் கட்சி வேட்பாளர் பத்மப்ரியா, ரெட்பிளிக்ஸ் சேனலுக்கு கொடுத்த பேட்டியின்போது, இடஒதுக்கீடு பற்றி பேசமறுத்து, பாதியிலேயே காமிராவைத் துண்டிக்க சொன்னது ஒரு உதாரணம். உதாரணத்திற்கு, இது மோடியின் கருத்திற்கு - பிஜேபியின் கருத்திற்கு ஒத்துப்போகவில்லையா?
மேலும், நமது நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் பணமதிப்பு நீக்கம். மக்கள் இதை திட்டித் தீர்க்கையில் அதை வரவேற்றவர் கமல். புதிய கல்விக்கொள்கையை தமிழகமே புறக்கணிக்கையில், அதை மிகச் சிறப்பானது, நாட்டிற்கு மிகவும் அவசியமானது எனக் கூறி வரவேற்றவர் பொன்ராஜ். இவர் தற்போது கமல் கட்சியின் வேட்பாளர் மட்டுமல்ல பொதுச்செயலாளரும்கூட.
மிக முக்கியமாக, போராட்டங்கள் டிராபிக் ஜாமை ஏற்படுத்துகிறது. அது இடையூறு என பேசுபவர் கமல். இதுதான் ஜனநாயக சிந்தனையா? ஒரு சமூகம் உயிர்த்துடிப்புடன், முழு ஜனநாயகத்துடன் இயங்குவதற்கு அடிப்படைக் கூறாக இருப்பது போராட்டங்கள்தாம். போராடினால் நாடு சுடுகாடாயிடும்னு பிஜேபி சப்போர்ட்டர் ரஜினிகாந்த் சொன்னதுக்கும் கமல் சொல்வதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? ஷாகின்பாக் போராட்டங்களை, மெரினா எழுச்சியை, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போரட்டங்களைப் பற்றி மோடி-பிஜேபி-அதிமுக விற்கு என்ன கருத்தோ அதுதான் கமலிற்கும். கருத்தியல்ரீதியில் முழுமையாக ஒத்துப்போவதால்தான் கமல், பிஜேபியின் பினாமி / பி டீம்.
ஊழல் கழகங்களுக்கு மாற்று மய்யம் என சொல்லும் கமல், அவருக்கு நெருக்கமான நண்பரிடமிருந்து தேர்தல் கமிஷன் கைப்பற்றிய பல இலட்சம் ரூபாய் பற்றி என்ன சொல்கிறார்? ஊழலிலே திளைத்து ஊறிப்போன ஐஜேகே-வுடன் கூட்டணி வைத்துக் கொண்டு ஊழல் ஒழிப்பு பேச கம்லுக்கு யோக்கியதை இருக்கிறதா? அல்லது நடிகர் சங்கத் தலைவராக இருக்கும்போது ஊழல் செய்துள்ளார் என குற்றஞ்சாட்டப்பட்ட சரத்குமாருடன் கூட்டணி வைத்துக் கொண்டு இதை கமல் பேசலாமா? அதுமட்டுமின்றி ஊழல் ஒழிப்பை முன்வைத்துதான் மோடியும் வெற்றிபெற்றார் என்பது மற்றொரு ஒற்றுமை.
அதிலும் புதிதாக தொடங்கப்பட்ட, மக்களுக்கு பரிச்சயமில்லாத வேட்பாளர்கள் இருக்கும் தமது கட்சி நிச்சயமாக தேர்தலில் வெற்றி பெறாது என்பது கமலுக்கும் தெளிவாக தெரியும். இருந்தாலும், இப்படி வெறித்தனமாக உழைப்பதற்கு காரணம் திமுகவின் ஓட்டுக்களை பிரிப்பதற்குத்தான். இது அரசியல் காழ்ப்புணர்ச்சி அல்ல. உண்மை.
இத்தேர்தல் திராவிட மரபிற்கும் ஆரிய பார்ப்பன பாசிசத்திற்கும் எதிரான போர் என பாஜகவைச் சேர்ந்த கே.பி. முனுசாமி உள்ளிட்டவர்களே சொல்லும் நிலையில் கமல் கட்சி என்ன சொல்கிறது? இது மாநிலத் தேர்தல் என்பதால் தி,முக, அதிமுகவை தான் எதிர்க்க வேண்டுமாம். இப்ப்போது பிஜேபியை பற்றி விமர்சிப்பது தேவையில்லாததாம். அ.தி.மு.க.வின் லகான் பிஜேபி-யின் கையில் இருக்கிறது என ஒத்துக்கொண்டே இதைச் சொல்வது சரியா? உண்மையில் திமுகவை மட்டுமே எதிர்ப்பதுதான் கமலின் நோக்கம். அதாவது திராவிட மரபை சீர்குலைப்பது.
கமல் ஜெயித்தால் கமலம் (தாமரை) மலர்ந்துவிடும்!! உஷார் மக்களே...
இன்னும் வரும்....!
- ஆதிரா.

Comments
Post a Comment