நரமாமிசம் உண்ணும் நரேந்திர மோடி!


இரண்டு நாட்களாக சாப்பிடாத பசி மயக்கம். குடிக்க சொட்டு நீரும் இல்லை. கால்கள் தள்ளாட, கண்கள் செருக, அழவும் திராணியற்று நிற்கும் சிறுபிள்ளை. அதைப் பார்த்துக் கொண்டே, எள்ளளவும் குற்ற உணர்வின்றி ஒரு ஐஸ்கி்ரீமை சுவைக்க முடியுமா உங்களால்? அதுவும் அப்பிள்ளையின் காசிலேயே ஒருவன் வாங்கித் தின்கிறான் என்றால் அவனை என்னவென்று சொல்வீர்கள்? கடைந்தெடுத்த அயோக்கியன், கேடுகெட்டவன் என்றா?


இன்று இந்தப் பட்டங்களுக்கு மிகப் பொருத்தமானவராக இருப்பவர் நமது பிரதமர் நரேந்திர மோடிதான். ஆடாமல், அசையாமல், வாய்திறக்காமல் மவுனமாகவே பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் கொல்ல முடியுமா? ஆம். அதையும் சாத்தியப்படுத்தியுள்ளாரே மிக மிக எளிமையாய்.

நாட்டில் தடுப்பூசி தயாரிப்பதற்கு தயாராக சைடஸ் கேடீயா, பானசியா பயோடெக், இண்டியன் இம்யூனோலாஜிக்கல்ஸ், மைன்வேக்ஸ், பயோலஜிகல்-இ என பல பெரிய நிறுவனங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டிலேயே செங்கல்பட்டில் உள்ள எச்.பி.எல், சென்னை கிண்டியில் உள்ள பிசிஜி, குன்னூரில் பாஸ்டர் நிறுவனம் ஆகியவற்றிலும்கூட தடுப்பூசி தயாரிக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். இவற்றில் எல்லாம் போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கினால் எளிதாக தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். உண்மையில் உலகின் தடுப்பூசி உற்பத்தி மையமாக விளங்குவதே இந்தியாதான். ஆனாலும், மோடிக்கு அதை செய்ய மனம் வரவில்லை. ஏன்? பாரத் பயோடெக்கும், சீரம் இன்ஸ்டிட்யூட்டும்தான் கொழுக்க வேண்டும். தடுப்பூசி தாமதமானாலும் பரவாயில்லை. மக்கள் ஈக்களைப்போல் கொத்துக் கொத்தாக செத்தாலும் கவலையில்லை.

அதேபோல்தான் உலோகங்களை உருக்கும் எல்லா ஆலைகளிலும் செறிவூட்டப்பட்ட ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியும். ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வதற்கான டேங்கர்களையும், உருளைகளையும்தான் தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. ஒவ்வொரு மருத்துவமனைக்கு அருகிலேயும் ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களை நிறுவினாலே போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க முடியும். மத்திய அரசால் இதை செய்ய முடியாதா? செய்ய முடியும் என்பதை தனிமனிதர்கள் நிரூபித்துக் காட்டுகிறார்கள்.

இன்றைக்கு சாதாரண ஆட்டோ ஓட்டுநர்கள்கூட தம் சொந்த செலவில் ஆக்ஸிஜன் உருளைகளை ஏற்பாடு செய்து இலவசமாக மனித உயிர்களை காப்பாற்றி வருகின்றனர். சொகுசுக் காரை விற்று ஆக்ஸிஜன் விநியோகிக்கிறார் டெல்லியைச் சேர்ந்த இளைஞர். நடிகர் சோனுசூட், பிரான்சில் இருந்து ஆக்ஸிஜன் ஆலைகளை இறக்குமதி செய்யவிருக்கிறார். ஆனால், இந்த அரசாங்கத்தால் ஏன் இதற்கான கட்டமைப்புகளை உருவாக்க முடியவில்லை?

வடமாநிலங்களில் மருத்துவமனைப் படுக்கைகள் இல்லை. மருந்துகள் இல்லை. இறப்பவர்களை புதைக்கவோ, எரிக்கவோ வழியில்லை. புரோகிதருக்கு தட்சணை கொடுக்க வழியில்லாமல் பிணங்களை ஆற்றில் விட்டுச் செல்கின்றனர் உறவினர்கள். இதைச் சரிப்படுத்துவதற்கு மத்திய அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. கடுகளவு முயற்சியும் இல்லை.

ஆனால், இதே சமயத்தில் முழு ஊரடங்கு நிலவும் டெல்லியில் 20,000 கோடி ரூபாய் செலவில் சென்ட்ரல் விஷ்டா கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. வரி கொடுத்த மக்களின் பிணங்கள்மீது கட்டப்படுகின்றன. மருந்து கேட்டால், மாட்டுச் சாணியிலும், மூத்திரத்திலும் குளித்தால், குடித்தால் கொரோனா வராது என வக்கிரமாக கூறுகின்றனர்.

இவ்வளவு ஆணவத்திற்கும், வக்கிரத்திற்கும் என்ன காரணம்? அதிகார மமதை, கார்ப்பரேட்டு பாசம், காவி வெறி அல்லாமல் வேறு என்ன? தம் சொந்த நாட்டு மக்களை கொன்றொழித்த ஹிட்லருக்கும் மோடிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. பாசிஸ்டுகள் இப்படித்தான் இருப்பார்கள். மக்களை உயிரொடு உரித்துத் தின்பார்கள்.

உலகின் தலைசிறந்த கோழைகள் பாசிஸ்டுகள். அதிகாரம் போய்விடும் எனத் தெரிந்த மறுகணமே ஓடி ஒளிந்து கொள்வார்கள். இவர்களைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. ஆட்சியிலிருந்து அகற்றுவதே அவசியம்.

-ஆதிரா

Comments

Popular posts from this blog

உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு. பாகம்_3

இலட்சத்தீவுகள் : குரங்கு கையில் பூமாலை!