நிழல் போல் வாழ்க்கை; நிழல்கள் பேசிக்கொள்கின்றன!
யூடியூப்பைத் திறந்தால் பலர் நிறைய கதை அளக்கிறார்கள்; சிலர் உண்மைக் கதை சொல்கிறார்கள். அப்படி, அண்மையில் உண்மைக் கதையாக பேரா. வீ. அரசு லத்தீன் அமெரிக்க நாவல் ஒன்றைப் படிக்கச் சொல்லியிருக்கிறார். நாவலின் பெயர்: ”நிழல்களின் உரையாடல்” ஆங்கிலம் வழி தமிழில் அளித்தவர் எழுத்தாளர் அமரந்தா. வீ. அரசுவின் சிறப்பான முயற்சி அந்த உரையை பேச்சு நடையிலேயே அச்சுக்குக் கொண்டு வந்துள்ளது தான்.
நூலில் சிறப்பு அம்சம் என்ன? மூன்றாம் உலக – இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டீன மொழி நாவலின் கதை பற்றி விளக்காமல் – லத்தீன் அமெரிக்க இலக்கியத்தை தமிழகத்துக்கு யார் யார் எப்போது அறிமுகம் செய்தார்கள்? “நிழல்களின் உரையாடல்” நாவலின் இலக்கிய வரலாற்றுப் பின்புலம் என்ன? – என்று சொல்லியிருக்கிறார்.
நாவலை எழுதியவர் பெண் எழுத்தாளர் மார்தா த்ராபா. இவர் பலதுறை அறிவாளி. இலக்கியம், ஓவியம், வரலாறு என்று தன் கணவனுடன் இணைந்தே பல எல்லைகள் தொட்டார். இவரது இலக்கிய மூல ஊற்றாக லத்தீன் அமெரிக்க ஆளூமையான கார்சியா மார்கோஸ் பற்றி விரிவாக அறிமுகப்படுத்தியுள்ளார் வீ. அரசு.
நாவலில் வரும் காலகட்டப் பின்னணியை சுருக்கமாக சொல்கிறேன். தென் அமெரிக்காவின் தெற்கே உள்ள கூம்புப் பகுதியில் எழுபதுகளிலிருந்து 90வரை (1973-1990) சிலியை ஆண்ட ராணுவச் சர்வாதிகாரி பீனாச்சேவின் கொடுங்கோல் ஆட்சியில் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள்; பல லட்சம் பேர் நாட்டை விட்டுத் துரத்தப்பட்டார்கள்; சுமார் 30,000 பேர் காணாமல் அடிக்கப்பட்டார்கள். தந்தையை, கணவனை, காதலனை, காதலியை, பிள்ளையை இழந்த அன்னையர் ஒவ்வொரு வாரமும் புகைப்படம் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இதுவே பிற போராட்டங்களுடன் இணைந்து அரசியல் போராட்டமாக மாற்றி பீனாச்செயைத் தூக்கி எறிந்தது. இதன் தாக்கம் பரவிய பின்னணியில் ஈழத்து அன்னையர் போராட்டம் தொடங்கியதையும், இன்றும் தொடர்வதையும் நாம் அறிவோம்.
ஐரீன் என்ற பிரபல நடிகை, டோலோரெஸ் என்ற பெண் அரசியல் போராளி இருவரும் சிறைக்குள்ளே அடைக்கப்படுகிற பின்னணியும், சிறையில்படும் கொடும் சித்திரவதையும், ஐரீனின் மகன் அரசு பயங்கரத்தில் சிக்கிக் கொண்டதும் இருவரின் மன ஓட்டங்களாக – எரிமலைக் குழம்பின் ஓட்டம் போல (இதனை நனவோடை உத்தி என்பார்கள்) நாவலில் வருகிறது. கடந்த கால வரலாற்றை நிகழ்காலத்தோடு பிணைத்து விவாதிப்பதே கதைக்களம். இப்படி 28,000 பேர் சித்திரவதைக்கும், பாலியல் கொடூரத்துக்கும் உள்ளாகி மனச்சிதைவடைந்தார்கள். ‘இங்கு நலம். அவ்விடம் நலம் தானே?’ என்று சொல்கிற வடிவம் இப்படிப்பட்ட நாவலுக்கு பொருந்துமா, சொல்லுங்கள். அதனால் புதுவடிவம் எடுத்துக்கொள்கிறது நாவல்.
*****
இந்தச் சொல்முறை / செயல்முறையை மார்க்கோஸ் தொடக்கம் விவரித்துத் தொகுக்கும்போது, அது ‘மாய எதார்த்த நாவல் வகை’ என்று தமிழகத்தில் கோணங்கி, சாரு நிவேதிதா போன்றோர் அறிமுகம் செய்தார்கள். ஏதோ புராணக் கதை போல, மாயாஜாலக் கதை போல நாம் ஊகிப்போம் என்று கருதியிருப்பார்கள் போல்லும் உண்மை அது அல்ல. மார்க்கோஸ், மார்தா உட்பட அனேகர் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டுக் கொண்டே எதார்த்த நாவல்களில் புதுவகைகளை உருவாக்கினார்கள் என்பதே உண்மை. ஒன்றை மறைத்து, ஒன்றைத் திரித்து, ஒன்றைப் பெரிதாக்கிக் காட்டுவதும் ஒருவித அரசியல்தானே?
பல பத்தாண்டுகளாக மொழிபெயர்ப்புக்களிலும் (குறிப்பாக லத்தீன் அமெரிக்க இலக்கியம், அரசியல், வரலாறு), சொந்தப் படைப்பிலும் ஈடுபடும் அமரந்தா (இப்புனைப்பெயர் கார்சியா மார்க்கோஸின் பெண் கதாப்பாத்திரத்தின் ஒன்றின் பெயர் தான்) 2009ல் ‘தோழி’ என்ற ஏடுக்காக ரவிக்குமார் எடுத்த பேட்டியில் இப்படிச் சொல்கிறார். “நான் மொழிப்பெயர்ப்பது வெவ்வேறு நாடுகளின் அரசியல் இலக்கியம். இன்னும் சொல்லப்போனால் அது மூலக் கதாசிரியர்களின் சித்தாந்த வாக்குமூலம். அதற்கு 100 சதம் உண்மையாக என் மொழிபெயர்ப்பு இருக்கவேண்டும் என்று முயற்சிப்பேன்,” எனவே அமராந்தாவின் விளக்கப்படியே மார்தா ஓர் அரசியல் நாவலாசிரியர்.
****
மார்தா திராபா கணவருடன் நாடுகடத்தப்பட்டு, பாரீசில் – இத்தாலியில் – அமெரிக்காவில் நிலையற்ற அரசியல் அகதியின் வாழ்க்கை வாழ்ந்தார். ஓவியம் வரைந்ததின் மூலமாக மகனை ஓவியனாக உருவாக்கியதின் மூலம் என்பதாண்டு லத்தீன் அமெரிக்க கலை வரலாற்றுப் பதிவை நூலாக்கியதன் மூலம், அரசியல் போராட்டங்கள் ஊடாக மார்தா பெரும் மனக்கிளர்ச்சியுடன் வாழ்ந்தார். 1983ல் மிகுந்த சந்தேகமான சூழலில் பல எழுத்தாளர்கள் உடன் வந்த விமானப் பயணத்தில் விபத்தில் கணவரும் அவருமாக உயிர் இழந்தார்கள். கொலம்பியாவில் வேலையில் இருந்த பொழுதும், ஏழை மக்கள் வாழ்ந்த பகுதிகளிலேயே வாழ்ந்தார்கள். ‘அதுவே எங்கள் மொழி’ என்றார்கள் மார்கோசும், மார்தாவும்.
“மார்தாவைப் படிக்கவேண்டுமென்றால் இலத்தீன் அமெரிக்கவினுடைய பண்பாட்டு வரலாற்றைப் படிக்கவேண்டும்; அர்ஜென்டீனா மற்றும் சிலியில் நடந்த ராணுவக் கொடுமைகளைப் படிக்கவேண்டும்” என்கிறார் வீ. அரசு. இக்குறுநூலில், யூடியூப்பில் இப்படிப்பட்ட கதைகளையே, இப்படிப்பட்ட நூல்களையே தேடிக் கண்டெடுத்துப் படியுங்கள் – நாளைய வரலாற்றை உருவாக்கும் உங்கள் பணிகளுக்காக!
- பீட்டர்
நூல் : ‘லத்தீன் அமெரிக்க ஆக்கங்கள்/தமிழ்ச்சூழல் – அமரந்தா – மொழியாக்கம்
ஆசிரியர் : பேராசிரியர் வீ. அரசு
விலை ரூ. 40
வெளியீடு : தடாகம், சென்னை
பேச : 91-44-421004421, 9840070870
ஓவியத்தில் இருப்பவர் : எழுத்தாளர் மார்தா த்ராபா
ஓவியம் : ஓவியர் மருது



Comments
Post a Comment