வங்கம் மீண்டும் எழும்


வங்காளம் நீண்ட மதச்சார்பற்ற, முற்போக்கு, இடதுசாரி பாரம்பரியம் உடைய மண். வர்க்கப் போராட்டத்தின் களப் பிரதேசம். ஆனால், இன்று?


காவிகள் கால் பதித்து விட்டார்கள். கிட்டத்தட்ட அதிகாரத்துக்கு வந்து விட்டார்கள். மம்தா வென்று விட்டார் என்பது உண்மைதான். ஆனால், பாஜக 38% வாக்குகள் பெற்று விட்டது. எந்தத் தருணத்திலும் காவி இருட்டு வங்கத்தை விழுங்கலாம்.

மனம் சோர்ந்து போக வேண்டாம். இந்த இருளிலும் ஒளியின் கீற்றுகள் உயர்ந்து ஒளிர்கின்றன. பாசிசத்தின் முன் வங்கம் மண்டியிடாது என இவை நம்பிக்கை ஊட்டுகின்றன.

பாஜக-வின் அத்தனை சூழ்ச்சிகளையும் உறுதியாக எதிர்த்து நின்றார் மம்தா. இதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், பாஜக மம்தா-வினால் தோற்கடிக்கப்படவில்லை. வங்கம் தோற்கடித்தது பாஜக-வை. இதற்கு ஒரு உதாரணம் பார்ப்போம்.

நவம்பர் 2020-ல் வங்காளக் கலைஞர்கள் ஒன்று கூடினர். “பாசிச ஆர்.எஸ்.எஸ் பாஜகவிற்கு எதிரான வங்காளம்” என்ற அமைப்பை உருவாக்கினர். காவிகளுக்கு எதிராக பாடல்கள், நாடகங்கள் பிறந்தன. வீதி நாடகங்கள், தெருமுனைக் கூட்டங்கள், பாடல் வீடியோக்கள், பேரணிகள் என அனைத்து வடிவங்களிலும் மக்களிடம் சென்றனர். இவர்கள் வைத்த முழக்கம் “பாஜகவிற்கு வாக்களிக்காதீர்”

இதன் ஒரு பகுதியாக ஜன-கண-மன என்ற நாடகக்குழு ”எலி வலை” என்ற நாடகத்தை நடத்தியது. ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் நாடகக் குழுவினரைத் தாக்கினார்கள். நாடகம் நிற்கவில்லை. 84 இடங்களில் நடந்தது. மக்களின் மனதை வென்றது.

பாஜக மாநிலத் தலைவர் திலிப் கோஷ் கொக்கரித்தார் “நீங்கள் ஆட்டம்-பாட்டத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லை என்றால் நாங்கள் உங்களை கவனிக்க வேண்டி வரும்.”

வங்காள சினிமாக் கலைஞர்கள் கவனித்தார்கள். தேர்தலுக்கு 3 நாள் முன்னர் “எங்கள் கருத்துக்களைப் பற்றி எங்கள் பாடல்கள்” என்ற பாடலை வெளியிட்டார்கள். காவிகளைத் தோற்கடிக்க அறைகூவினார்கள்.

இந்த சுற்றில் வங்கம் பாஜக-வைத் தோற்கடித்துள்ளது. இன்னும் பல சுற்றுகள் உள்ளது நமக்குத் தெரியும். பாசிசத்திற்கு எதிராக வங்க கலை-இலக்கியம் புத்தெழுச்சி பெற்று விட்டது. இனி வங்கத்தை காவிகள் கைப்பற்றுவது எளிது அல்ல.

இன்று நாடு முழுவதும் பாசிச இருட்டு இறுகி வருகிறது. இருட்டை கருக்கும் தனல் தெற்கே உள்ளது – தமிழகம், கேரளம் வடிவில். இப்போது கிழக்கிலும் நெருப்புப் பொறிகள் கிளம்பி விட்டன.

தீப்பொறிகளை இணைப்போம்! பாசிச இருளை எரிப்போம்!

- சார்லி

Comments

Popular posts from this blog

உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு. பாகம்_3

இலட்சத்தீவுகள் : குரங்கு கையில் பூமாலை!