தியாகத்திற்கு தலை வணங்குவோம்!
கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் 1,952 ரயில்வே தொழிலாளர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளார்கள். இது நேற்று ரயில்வே துறை வெளியிட்ட பத்திரிக்கை செய்தி.
ரயில்வே என்பது நாட்டின் ரத்த ஓட்டப்பாதை. கொரோனா முதல் அலை முதல் இரண்டாவது அலை வரை நாட்டின் ரத்த ஓட்டம் நிற்கவில்லை. ரயில்வே தொழிலாளர்களின் உழைப்பு ஓயவில்லை.
வெறும் உழைப்பு அல்ல. உயிரைப் பணயம் வைக்கும் உழைப்பு. தினமும் 1000 ரயில்வே தொழிலாளர்கள் கொரோனாவில் பாதிக்கப்படுகிறார்கள். அதில் சிலர் உயிர் இழக்கின்றனர். உயிர் அபாயம் இருந்தாலும் 12 லட்சம் தொழிலாளர்கள் களத்தில் நிற்கிறார்கள்.
இவர்களின் உழைப்பு நாட்டிற்கு மூச்சுக் காற்றைக் கொடுக்கிறது. கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் 4700 டன் மருத்துவ திரவ ஆக்சிஜனை தேவைப்படும் பகுதிகளுக்கு விநியோகித்து உள்ளது. இந்த உழைப்பு நாட்டின் உயிரைக் காப்பாற்றும்.
1947-ல் நாட்டின் பிரிவினையின் போது இரண்டு பக்கமும் மத வெறியர்கள் மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தனர். அப்போதும் அச்சமில்லாமல் அகதிகளின் உயிர்களைக் காப்பாற்றியது ரயில்வே தொழிலாளர்கள் தான். பாகிஸ்தான் முதல் வங்க தேசம் வரை துணிவுடன் வண்டிகளை ஓட்டினர். கல்லெறி, நெருப்பு, குண்டுவீச்சு-க்கு நடுவே துணிந்து சென்றார்கள். கொலைவெறி கும்பல்களிடம் இருந்து மக்களைக் காத்தார்கள் ரயில்வே தொழிலாளர்கள்.
அந்த வீரமிக்க மரபில் வந்தவர்கள் தான் இன்றும் கொரோனாவிற்கு எதிராக போராடுகிறார்கள்.
ரயில்வே தொழிலாளர்களின் வீரத்தை வாழ்த்துவோம்!
அவர்களின் தியாகத்திற்கு தலை வணங்குவோம்!
கொரோனா எதிர்ப்புப் போரில் உயிரிழந்த தியாகிகளுக்கு வீர வணக்கம்!
- சார்லி

Comments
Post a Comment