இதயங்கள் இணையும்! பாசிசம் மடியும்!
பண முதலைகள் ஆதிக்கம் செலுத்தும் போது ஏழைகள் கவுரவமாக வாழ முடியாது. இது தெரிந்த விசயம் தான். மோடியின் ஆட்சியில் ஏழைகள் கவுரவமாக சாகவும் முடியவில்லை. இதுவும் தெரிந்த விசயம் தான்.
- சார்லி
ஆனால், இறந்த ஏழைகளுக்கு இறுதி மரியாதை கூட கிடையாது. அந்த உடல்களை எங்காவது தூக்கி வீசுங்கள். அவற்றை நாய்கள் தின்னட்டும்; நரிகள் சிதைக்கட்டும். மனித மாண்புகளை சிதைக்கும் காவி கும்பல் இழைக்கும் சமீபத்திய குற்றம் இது.
கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் கொரோனா-வில் இறந்த ஏழைகளை எரிக்க காசில்லை. ஒரு பிணத்தை எரிக்க 40,000 ரூபாய் தேவை. இதற்கு விறகு விலையேற்றம் ஒரு காரணம். காவிகளின் ஆசியுடன் கொரானா செழிக்கிறது. பிணங்கள் குவிகின்றன.இது மற்றொரு காரணம்.
காசில்லாத ஏழைகளின் உடல்கள் கங்கை ஆற்றில் வீசப்படுகின்றன. நீரோட்டம் பிணங்களை அண்டை மாநிலமான பீகாருக்கு இழுத்து வருகிறது. ஒரே நேரத்தில் 30 முதல் 40 பிணங்கள் ஆற்றில் மிதந்து வருவதாக வழக்குரைஞர் அஸ்வினி வர்மா இந்து நாளேட்டிற்கு தகவல் கொடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தை உருக்குலைக்கும் துரோகி ஆதித்யநாத்தின் ஆட்சியின் சமீபத்திய சாதனை இது. காவி உடை தரித்த கபட வேடதாரிகளின் ஆட்சியில் ஏழைகள் அனுபவிக்கும் கொடுமைகளின் உச்சகட்ட உதாரணம் இது.
மனித உடல்களை நாய்கள் தின்பதாக அஸ்வினி குமார் தெரிவித்து இருக்கிறார். நெஞ்சம் பதறுகிறது. இந்த உடல்கள் உயிருடன் இருந்த போது செல்வந்தர்கள் தின்றார்கள். இறந்த பிறகு நாய்கள் தின்கின்றன.
நேற்று வரை நம்மோடு வாழ்ந்த இந்த மனிதர்களுக்கு ரத்த சொந்தங்கள் இருக்கும்; மற்ற சொந்தங்களும் இருக்கும். இவர்களால் தங்களோடு உறவாடிய ஒரு உறவுக்கு இறுதி மரியாதை கூட செலுத்த முடியவில்லை. இந்த அவலம், அந்த சொந்தங்களின் வாழ்நாள் வடு. இவர்களின் வேதனையை நினைத்தால் இதயத்தில் அமிலம் வீசியது போல எரிகிறது.
மக்களின் நெஞ்சங்கள் எரிகின்றன. நெருப்பு இதயங்கள் என்றாவது ஒரு நாள் இணையும். அன்று பாசிசம் மடியும். அப்போது பாசிசத்தின் பிணத்தை நாய்கள் தின்னும்.
- சார்லி
முகநூலில்...12/05/2021

Comments
Post a Comment