கொரானா இரண்டாவது அலையில், பிணங்கள் எரிந்துகொண்டிருக்கும் பொழுது, பட்டினியால் எரிந்து கொண்டிருக்கும் வயிறுகளை கண்டுகொள்ள யாருமில்லை.
தில்லியில் ஒரு பகுதியில் உள்ள ரேசன் கடையில் மக்கள் வந்து பொருட்களை கேட்பதும், கடை அலுவலர் இல்லை என்று சொல்வதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தில்லியில் அந்த பகுதியில் மொத்தம் உள்ள 110 ரேசன் கடைகளில் மே 15 முதல் மே 20 வரை வெறும் 44 கடைகளில் மட்டுமே பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. மீதிக்கடைகளில் இன்னும் ஏதும் விநியோகிக்கவில்லை.
வழக்கமாக மாதத்தின் முதல் வாரத்திலேயே விநியோகித்துவிடுவார்கள். தற்போதுவரை இன்னும் விநியோகிக்காததற்கு காரணம் மத்திய அரசுதான். மாநில அரசின் ரேசன் பொருட்கள் வந்து சேர்ந்துவிட்டன. ஆனால், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் படி மத்திய அரசு தரவேண்டிய ரேசன் பொருட்கள் இன்னும் வந்து சேரவில்லை.
கொரோனா இரண்டாவது அலையின் கடும் நெருக்கடியில், மாநில பொருட்களுக்கு ஒருமுறையும், மத்திய அரசின் பொருட்களுக்கு ஒரு முறையும் என இருமுறை மக்களை அலைக்கழிக்க முடியாது அல்லவா! ஆகையால் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்த திடீர் ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, உணவுக்கே வழியில்லாமல் பல லட்சம் பேர் நடந்தே சொந்த ஊர் போய் சேர்ந்தார்கள். அரசுகளின் அலட்சியத்தால், இந்த பயணத்திலேயே பசியிலும், பட்டினியிலும், கொடுமையான வெய்யிலிலும் ஆயிரத்திற்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டனர்.
அந்தக் கொடூர அனுபவத்தினால், இந்த முறை சுதாரித்து முன்னரே ஊருக்குக் கிளம்பிவிட்டார்கள். ஆகையால் பல வீடுகள் இப்பொழுது பூட்டிக்கிடக்கின்றன. ஆனால் சிலரால் அப்படி கிளம்ப முடியவில்லை. ”ஊருக்கு போனாலும் அங்கும் சாப்பிடுவதற்கு பணம் வேண்டுமே! தில்லியில் உள்ள வீட்டிற்கும் வாடகை கொடுக்கவேண்டுமே!” என்பது தான் காரணம்.
இந்த முறை தேசிய ஊரடங்கு இல்லை. அப்படி அறிவித்தால், மத்திய அரசு மாநில அரசுகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டுமே! ஆகையால் மத்திய அரசு அந்த பொறுப்பிலிருந்து கழன்று கொண்டது. ஆனால், மாநில அரசுகள் நிலவரத்தின் தீவிரத்திலிருந்து ஊரடங்கு அறிவிக்கின்றன. தில்லியில் ஐந்தாவது வாரம் ஊரடங்கு தொடர்கிறது. மும்பையில் ஆறாவது வாரம். கொல்கத்தாவில் மூன்றாவது வாரம். சென்னையில் இரண்டாவது வாரம்.
தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன. சிறு சிறு நிறுவனங்களிடம் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர்களையும் மக்களின் உயிர்களை காக்க அரசு எடுத்துக்கொண்டு போய்விட்டது. அவர்களுக்கு வருமானத்திற்கு மாற்று வழிகள் இல்லை. சிறு வியாபாரிகள், அமைப்புசாரா தொழிலாளர்கள், பாதை வியாபாரிகளின் நிலைமையோ சொல்லி மாளாது.
சிறு சிறு தொழிற்சாலைகள் இயங்கினால் தான் தொழிலாளர்களுக்கு சம்பளம் தருவார்கள். ஊரடங்கு தொடர்ந்து இருப்பதால், நிறுவனங்களிடமும் பணப்புழக்கம் இல்லாமல் போய்விட்டது. விளைவு வேலைப் பார்த்தத்திற்கான நிலுவை சம்பளத்தைக் கூடப் பெற முடியவில்லை.
கடந்த ஆண்டு, பெண்களின் கணக்கில் 500 ரூபாயாவது போட்டது மத்திய அரசு. தொழிலாளர்களுக்கும் சில திட்டங்களை அறிவித்தது. ஆனால், இந்த ஆண்டு இதுவரை எதையும் மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கவில்லை.
தமிழக அரசு 4000 ரூபாய் நிவாரண நிதியாக தருவதாக அறிவித்ததில் முதல் தவணையாக மே மாதம் ரூ. 2000-த்தை ரேசன் அட்டைதாரர்களுக்கு தந்திருக்கிறார்கள். இதெல்லாம் ரேசன் அட்டைதாரர்களுக்கானது! ரேசன் அட்டை இல்லாதவர்களும் இங்கு ஒவ்வொரு பகுதியிலும் லட்சங்களில் உண்டு. அவர்கள் பட்டினியைப் போக்க என்ன செய்வது?
சென்னையில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை அத்தியாவசிய கடைகள் திறக்க அனுமதித்து இருக்கிறார்கள். அத்தியாவசிய தொழிற்சாலைகள் திறக்க அனுமதித்திருக்கிறார்கள். பொதுப்போக்குவரத்து இல்லை. வீட்டு வாடகை, மருத்துவம், குழந்தைகள் பராமரிப்பு என அடிப்படை தேவைகளுக்கு பெரும்பாலான மக்கள் என்ன செய்வார்கள்?
கடந்த அலையின் பொழுது சிவில் சமூகம் தன் சக்திக்குட்பட்டு உணவு தந்து, பொருட்கள் தந்து ஏதுமற்றவர்களை காப்பாற்றியது. இந்த அலையின் தாக்கம் கடந்த அலையை விட மிகக் கொடிது. சிவில் சமூகமும் நெருக்கடிக்குள் மாட்டிக்கொண்டுவிட்டது.
இப்பொழுது தொழிலாளர்கள் தங்கள் வாழ்வை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டிய நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். கடந்த ஊரடங்கு காலத்திலாவது மக்களில் சிலரிடம் கொஞ்சம் சேமிப்பு இருந்தது. இப்பொழுது கடனை வாங்கியும், பட்டினியோடும் வாழ்க்கையை கடத்துகிறார்கள்.
அசிம்பிரேம்ஜியின் பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வுப்படி, வருமான இழப்பால் மக்கள் சாப்பிடும் உணவின் அளவும், அவர்களது சத்தின் அளவும் குறைந்திருக்கிறது. 230 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே சென்றிருக்கிறார்கள். முறைசார் தொழிலாளர்களில் பாதிபேர் முறைசாராத் தொழிலாளர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். வருமான இழப்பால் வாழும் முறையே மாறியிருக்கிறது.
மும்பையில் முன்பு ஒரு அறையை பகிர்ந்துகொண்டு வாழ்ந்த ஒருவர், இப்பொழுது அறை வாடகை கொடுக்கமுடியாமல் தெருவில் தூங்குகிறார். கடலில்தான் குளிக்கிறார்.
”இந்த கடுமையான நெருக்கடி நிலையை எதிர்கொள்ள மக்களின் அடிப்படை தேவைகளுக்காக மூன்று மாதங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5000 பணமாக கொடுக்கப்படவேண்டும்” என அசிம்பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆலோசனை தெரிவித்திருக்கிறார்கள்.
தொழிலாளர்களின் இந்த அவல நிலையை மத்திய அரசு புரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை. இந்தியா முழுவதும் குறுக்கும் நெருக்குமாய் மக்கள் அலைந்த பொழுதே கண்டுகொள்ளவில்லை.
ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொத்துக் கொத்தாக மடியும் போதும் மக்களைக் காப்பாற்ற முன்வரவில்லை. ஆனால், 20,000கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்றமும் தனகு புதிய பங்களாவும் கட்டிக்கொண்டிருக்கிறார். தனக்காகவும், தனது சங்கப்பரிவார கும்பலுக்காகவும், தங்களுக்கு நெருக்கமான கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்து மதிப்பை உயர்த்துவதற்காகவும் மட்டுமே சிந்திக்கும் நம் பிரதமர் இதையெல்லாம் கண்டுகொள்வாரா?
ஆனால், தொழிலாளி வர்க்கம் இதை கண்டுகொள்ள வேண்டும். வறுமையில் சாவதா? போராடி உரிமைகளை வெல்வதா?
- சாக்ரடீஸ்
மே 20ல் Scroll தளத்தில் வெளிவந்த கட்டுரையில் உள்ள விவரங்களை எடுத்துக்கொண்டு எழுதப்பட்டது.
விரிவாகப் படிக்க....
https://scroll.in/article/995298/invisible-in-the-pandemic-fires-a-slow-burn-of-hunger-and-distress-in-india?fbclid=IwAR1q8C8_bNId-moCRYMKsfB4mYtl6JtZIfsFcR0hefXEsG1dCFFVkzlyeCk




Comments
Post a Comment