ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை நெஞ்சிலேந்துவோம்!
மே 22. கருப்பு நாள். தமிழ் மக்களின் இதயங்களில் நீங்காத வடுவாய் நிலைத்திருக்கும் நாள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை வெறியாட்டம் போட்ட நாள். 13 போராளிகளை துள்ளத் துடிக்க சுட்டுக் கொன்ற நாள்!
உயிருக்கு உத்திரவாதமில்லா நிலை. கருப்பையில் இருக்கும் பிஞ்சையும் கொல்லும் நஞ்சு. உயிர்க்காற்றை, நீரை, நிலத்தை விசமாக்கிய எமன். அது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை.
குமரரெட்டியாபுரத்தில் ஆரம்பித்தது ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம். ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் கடும் உழைப்பால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக செழித்து வளர்ந்தது. யாரும் கண்டு கொள்ளாதபோதும் தினம்தினம் பெருந்திரள் மக்களின் போராட்டம்.
மக்கள், திரைப் பிரபலங்களை வேடிக்கைப் பார்க்கும் நிலை அங்கில்லை. கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் போராட்டக்காரர்களை, சின்னஞ்சிறு போராளிகளை கண்டு வியந்த சூழல். மக்கள் போராட்டம் பெரும் காட்டுத்தீயாய் பரவியது.
தூத்துக்குடி மாவட்டமே ஸ்டெர்லைட் எதிர்ப்பு முழக்கங்களால் அதிர்ந்தது. ஆனால்,
அரசோ கண்ணிருந்தும் குருடாக, காதிருந்தும் செவிடாக, வாயிருந்தும் ஊமையாக வாளாவிருந்தது. கேளாத செவிகளை கேட்கவைக்கத் திட்டமிட்டனர் போராளிகள். போராட்டத்தின்100-ஆம் நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடத் திட்டம்.
அன்று மே 22. கதிரவனின் வெப்பத்தையும் விஞ்சி அனல் வீசியது தூத்துக்குடி. இலட்சக்கணக்கான மக்களின் பேரணி, ஊர்வலம். இடியென அதிர்ந்தன முழக்கங்கள். சிறுவர்கள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் என சாலைகளில் வண்ணக்கலவை. வீராவேசமான குரல்கள். உற்சாகமான நடை. நம்பிக்கை சுடர்விடும் முகங்கள்.
ஆலையை மூடிவிடுவோம் என்ற மகிழ்ச்சியில் முன்னேறியது பேரணி. இன்னும் 100 அடிகளே, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு.
காட்சி மாறியது. போலீசு தடியடி. வெறித்தனமான தாக்குதல். கூட்டத்தில் தள்ளுமுள்ளு. வெடியோசை. குறிபார்த்து சுடும் துப்பாக்கிகள். வாயிலும், மார்பிலும், வயிற்றிலும் சுற்றுக் கொல்லும் கொடூரக் காட்சி.
காற்றை நிறைத்தது மக்களின் மரண ஓலம். போலீசின் அடிதாளாமல் அழுது முனகி, மங்கும் குரல்கள். உறவுகளைத் தேடி பரிதவிக்கும் கூக்குரல்கள். பெற்றோரைத்தேடி ஓடும் பிஞ்சுகள்.
போராட்டக்களத்தை காட்சிப்படுத்தின ஊடகங்கள். கொதித்தெழுந்தது தமிழகம். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாய் நின்றது. உலகமே கண்டித்தது துப்பாக்கிச் சூட்டை. ஜனநாயக சக்திகளும், தமிழக மக்களும் அரசைக் கண்டித்து ஆங்காங்கே போராட்டம்.
இலட்சம் இலட்சமாய் உயர்ந்தன கண்டனக்குரல்கள். அறிக்கைகள். காணொளிகள். உச்சபட்சமாக, ஸ்டெர்லைட் வேதாந்தாவின் முதலாளி அனில் அகர்வாலின் மகனை புரட்டியெடுத்தனர் பிரிட்டன்வாழ் தமிழர்கள்.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் (PRPC) நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. வழக்கறிஞர் குழு தூத்துக்குடி விரைந்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாய் சட்டக் களத்தில் நின்றது.
ஆனால், பாசிச பாஜக அரசோ கள்ளமவுனம் சாதித்தது. தமிழக அரசோ நாடகமாடியது. டிவியைப் பார்த்துதான் தெரிந்து கொண்டதாக நீலிக்கண்ணீர் வடித்தார் அன்றைய முதல்வர் எடப்பாடி. அதேசமயம் தூத்துக்குடியில் வரலாறு காணாத போலீசு வெறியாட்டம். தூத்துக்குடி துண்டிக்கப்பட்டது. யாரும் உள்நுழைய முடியாத நிலை. இணையம் முடக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டனர்.
ஆனால், போராட்டக்காரர்களைத் தேடித் தேடி கைது செய்தது போலீசு. அதன் இரத்தவெறி அடங்கவில்லை. வீடுகளுக்குள் நுழைந்து கைது செய்தது.
வெறித்தனமாக தாக்கியது. திருடனைப்போல் நள்ளிரவுகளில் சுவரேறிக் குதித்து குடும்பங்களை அச்சுறுத்தியது. பயத்தில் வீறிட்டழுத குழந்தைகளின் கதறல்கள் காண்போரை கண்கலங்க வைத்தன. .
நிலைமை கைமீறியதை உணர்ந்தது அரசு. மக்களின் கோபத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. ஆலையை மூடியது. ஆட்சியரை மாற்றியது. ஒருநபர் ஆணையத்தை அமைத்தது. போராட்டத்தில் தியாகியான 13 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்தது.
ஆனால், உறவுகளை இழந்த மக்கள் மீளாத் துயரில் இருந்தனர். காயம்பட்ட போராளிகள் இறந்ததால் தியாகிகளின் எண்ணிக்கை 15 ஆனது. ஸ்னோலினுக்காகவும், மற்ற தியாகிகளுக்காகவும் கண்ணீர் சிந்தினர் தமிழ் மக்கள். ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக இருந்தது.
நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணையைத் தொடங்கியது. வேதாந்தாவோ, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வழக்கு தொடுத்தது. PRPC அதை எதிர்த்துப் போராடியது. உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட்டின் கோரிக்கையை மறுத்தது. மக்களின் கோபத்தால் உச்சநீதிமன்றமும் தயங்கியது.
ஆலை மூடப்பட்ட அடுத்தடுத்த ஆண்டுகளில், தூத்துக்குடியில் காற்றின் தரம் உயர்ந்தது. இதை மாசுக் கட்டுப்பாடு வாரியமே அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. ஸ்டெர்லைட் ஆலைமூடுவதற்கு முன் 2017-இல் காற்றின் தரம் 2.08% மட்டுமே இருந்தது. இது 2018-இல் 23.23% ஆகவும், 2019-இல் 49.23 ஆகவும் அதிகரித்ததாக அறிக்கைவிட்டது.
இதற்காகத்தானே போராடினர் தூத்துக்குடி மக்கள். தூய்மையான காற்றை சுவாசிக்கவும், உயிர்வாழும் உரிமையை நிலைநாட்டவும்தானே. பெரும் இழப்புகளுக்கு இடையில் மக்கள் கொடிய அரக்கனை ஒழித்த நிம்மதியில் இருந்தனர்.
ஆனால், கொலைகார வேதாந்தாவோ ஓயவில்லை. பல பொய்வழக்குகளைப் போட்டது. PRPC பல சிரமங்களுக்கிடையில் பொய்வழக்குகளை உடைத்தது. மக்களுக்கு துணைநின்றது. பின்வாங்கிய வேதாந்தா அடுத்து பராமரிப்புக்காக ஆலையைத் திறக்க வேண்டுமென நயந்து கோரியது. மீண்டும் மக்களின் எதிர்ப்புணர்வுக்கு அஞ்சி, உச்சநீதிமன்றம் முடியாதென்றது.
மனம் தளராத வேதாந்தா குழுமம் தனக்கான காலத்திற்காக காத்திருந்தது. எப்படியும் தமது விசுவாசிகள், இந்திய அரசியலில் இருக்கும் கருப்பு ஆடுகள் தம்மைக் கைவிடாதென நம்பிக்கையுடன் காத்திருந்தது.
இந்த சூழலில் கொரோனா முதல் அலை. அடுத்து இரண்டாவது அலை. மக்கள் ஆக்ஸிஜனின்றி இறக்கும் அவலநிலை. இப்போது ஸ்டெர்லைட் துணிந்து முன்வந்தது. ஆடு நனைகிறதென ஓநாய் அழுத கதை. ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து மக்களைக் காப்பாற்ற அனுமதிக்குமாறு நரித்தனமாக வழக்கு தொடுத்தது.
ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பலின் ஒத்துழைப்பு. அடிமை அதிமுகவின் மறைமுக ஆதரவு. மக்கள் கொரோனா பாதிப்பின் பின்னால் இருக்கும் சமயம். அதனால், மக்கள் எதிர்ப்பு அவ்வளவாக இருக்காதென்ற தைரியம். ஆலையைத் திறக்க சம்மதித்தது உச்சநீதிமன்றம்.
ஆக்ஸிஜனுக்காக கொத்துகொத்தாக மக்கள் மடியும் நிலை. இப்போது ஆலை வேண்டாமென்றால் ஆக்ஸிஜன் வேண்டாமா என பாசிச சக்திகள் கொந்தளிப்பார்கள். கொரோனாவுக்கு எதிராக இருக்கும் கடும் யுத்தத்தில் ஜெயிக்கவோ, வீண் தூற்றுதலுக்கு அஞ்சியோ, வேறு காரணங்களுக்கோ ஆலையை திறக்க ஒத்துக்கொண்டது திமுக அரசு.
ஆலையைத் திறந்தது மக்களுக்கு பேரதிர்ச்சி. பெருங்கோபம். இந்நிலையில் நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கையும் இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
அதன் அடிப்படையில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு போராட்டத்தில் கொல்லப்பட்டு தியாகியான 13 பேர் மற்றும் காயமடைந்த 3 பேரின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கியுள்ளது. காவல் துறையால் கைது செய்யப்பட்ட, உடல் ரீதியாக, மனரீதியாக தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட 93 பேருக்கு தலா 1 இலட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ வசமுள்ள, ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராடியவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளது. இது செய்யப்பட வேண்டியதுதான் என்றாலும் முழு தீர்வல்ல.
தினம் 1050 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தருவதாக சொன்ன வேதாந்தா, இன்று 7 மெட்ரிக் டன்னை தாண்டவே திணறுகிறது. மக்களை புற்றுநோய்க்குள் தள்ளிய, விஷக் காற்றால் கருவிலேயே குழந்தைகளைக் கொன்ற, 15 பேரை அநியாயமாக சுட்டுக் கொன்ற இந்த ஆலையை இனியும் இயங்க அனுமதிப்பதா?
தமிழக அரசே,
• ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற அவ்வாலை நிர்வாகத்திடம் வலியுறுத்த வேண்டும். அல்லது ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட உச்சநீதிமன்ற நீதிபதி ரோகிண்டன் நாரிமன் அமர்வில் வழக்கை நடத்தி முடிக்க வேண்டும்!
• தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அப்பாவி மக்களை சுட்டுக்கொன்ற போலீசு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்! அவர்களுக்கு உயர் பொறுப்புகள் வழங்கப்படக் கூடாது.
• ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளை சுற்றுச்சூழல் போராளிகளாக அறிவிக்க வேண்டும்!
• நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டும்!
இதற்கான போராட்டங்களை தொடர்வதுதான், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கொல்லப்பட்ட தியாகிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி! ஒன்றிணைந்து போராடுவோம். வழக்கை தொடர்ந்து நடத்துவோம். தூத்துக்குடி மக்களுக்கு துணைநிற்போம்.
நெஞ்சிலேந்துவோம்! நெஞ்சிலேந்துவோம்!
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போரில்
கொல்லப்பட்டத் தியாகிகளை
நெஞ்சிலேந்துவொம்! நெஞ்சிலேந்துவோம்!
-ஆதிரா.



Comments
Post a Comment