தோழர் இரா. ஜவஹருக்கு அஞ்சலி!
தோழர் இரா. ஜவஹர் (வயது 71) நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்தார். கடந்த வாரம் கொரானா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 28/05/2021 அன்று காலமானார்.
தோழர் ஜவஹர் தன்னுடைய இளமைக் காலத்தில் சிபிஎம் கட்சியில் முழுநேர ஊழியராக அம்பத்தூர் பகுதியில் தொழிற்சங்க பணிகளை செய்தார். பிறகு, பத்திரிக்கைத் துறையில் தினமணி, ஜூனியர் போஸ்ட், தமிழன் எக்ஸ்பிரஸ் என தமிழகத்தின் முக்கிய பத்திரிக்கைகளில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றினார், பல இளம் பத்திரிக்கையாளர்களுக்கு உற்சாகமூட்டும் வழிகாட்டியாக இருந்தார். பத்திரிக்கையாளர்களின் குரல் நசுக்கப்படும் காலங்களில் அடக்குமுறைக்கு எதிராக போராடியவர்.
”கம்யூனிசம் : நேற்று, இன்று நாளை”, மகளிர் தினம் – உண்மை வரலாறு என புத்தகங்களை எழுதியுள்ளார். தமிழகத்தில் உள்ள முற்போக்கு, ஜனநாயக சக்திகளுடன், புரட்சிகர அமைப்புகள் முன்னெடுக்கும் இயக்கங்களுக்கு தன்னால் சாத்தியமான அளவிற்கு துணையாக நின்றவர். நாம் முன்னெடுக்கும் இயக்கங்களுக்கும் தன் ஆதரவை தெரிவித்தவர்.
மார்க்சியம் தான் இந்த உலகத்தை மாற்றுவதற்கான சித்தாந்தம். அதை தன் வாழ்நாள் முழுவதும் தொழிலாளர்களுக்கும் சென்று சேரும் வகையில் எளிமையாக பரப்புரை செய்தவர். அவருடைய இழப்பு சமூகத்திற்கு பெரிய இழப்பு.
அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

Comments
Post a Comment