தடுப்பூசியிலும் தமிழகத்தை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு!


தடுப்பூசி கொரோனா மரணங்களை தடுக்கிறது. கொரோனா மூன்றாவது நான்காவது அலைகள் வராமல் தடுக்கவும், வந்தாலும் தற்போதிருப்பதுபோல மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தாமல் தடுக்கவும் மிக முக்கியமான ஆயுதம்என மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.

 

அதன்படி, இந்த ஆண்டுக்குள் நாட்டில் 80% மக்களுக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும். அதனால்தான் மாநில அரசுகளும் தடுப்பூசிகளைப் பெற தீவிரமாக செயல்படுகிறார்கள். ஆனால், தடுப்பூசியை மாநில அரசுகளுக்கு பிரித்துத் தரவேண்டிய ஒன்றிய அரசோ ஓரவஞ்சனை செய்கிறது.

 

ஒரு கண்ணுக்கு வெண்ணெயும், இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைக்கிறது. 7.88 கோடி மக்கள்தொகை இருக்கும் இராஜஸ்தானுக்கு 1.42கோடி தடுப்பூசிகளை ஒதுக்கியுள்ளது. பாஜக ஆளும் குஜராத்தில் 6.94 கோடி மக்கள்தொகை. அதற்கு 1.06 கோடி ஒதுக்கியுள்ளது.

 

இராஜஸ்தானை விட சற்று குறைவாக, 7.62 கோடி மக்கள்தொகை இருக்கும் தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்சம் 1.25 கோடியாவது ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால், வெறும் 72 இலட்சம் தடுப்பூசிகளை மட்டுமே ஒதுக்கியுள்ளது. கூடுதலான தடுப்பூசிகள் ஒதுக்கக்கோரியும் அதுபற்றி வாய்திறக்கவில்லை.

 

மே மாத கணக்குப்படி மட்டுமே 1.8 இலட்சம் தடுப்பூசிகள் தமிழ்நட்டிற்கு வரவேண்டியுள்ளது. அதையும் தாமதப்படுத்துகிறது. இதனால்தான் தமிழக மக்கள் #BJPBetrayingTNPeople என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டாக்கி ஒன்றிய அரசின் மீதான அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

 

ஒன்றிய அரசின் இலட்சணம்தான் தெரியுமே. ஆக்க வேலைகளில் அல்லாமல், அழிவு வேலைகளில்தான் ஈடுபடும். அதனால், தமிழக அரசே தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கலாம் என்றாலும் முட்டுக்கட்டைப் போடுகிறது.

 

செங்கல்பட்டிலுள்ள ஹெச்.எல்.எல் பயோடெக் தடுப்பூசி வளாகத்தில், அதன் தற்போதைய செயல்திறன்படி வருடத்திற்கு 8 கோடி டோஸ் அளவு தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியும். மேலும், அதில் 10% முதல் 15% வரையிலான அளவு வேலைகள் நிலுவையில் உள்ளன. இதை சரிசெய்தால் ஆண்டுக்கு 58.5 கோடி டோஸ் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய முடியும். அதற்கான அனைத்து கட்டமைப்புகளும் இருக்கிறது என்று அங்கு பணிபுரியும் உயரதிகாரி ஒருவர் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

 

அதன்படி பார்த்தால், இத்தடுப்பூசி வளாகத்தின் மூலம் நாட்டின் தேவையையே ஓரளவு பூர்த்தி செய்ய முடியும். ஆறு மாதத்திற்குள் உற்பத்தியைத் தொடங்கினாலும், அதற்கடுத்த ஆறு மாதத்திற்குள் கிட்டத்தட்ட 30 கோடி தடுப்பூசிகள் உற்பத்தி செய்ய முடியும். தமிழ்நாட்டின் தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்து மற்ற மாநிலங்களுக்கும் அளிக்க முடியும்.

 

இவ்வளாகத்தை தன் கையில் வைத்திருக்கும் ஒன்றிய அரசு, தாமே முன்வந்து போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், கார்ப்பரேட்டு கம்பெனிகளான சீரமும் பாரத் பயோடெக்கும் கொழுப்பதற்காக இதை செய்ய மறுக்கிறது.

 

வெண்ணெயை கையில் வைத்துக் கொண்டு நெய்யுக்கு ஏன் அலையவேண்டும்? தமிழக முதலமைச்சர், அந்நிறுவனத்தை குத்தகைக்கு வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதுபற்றி ஒருவாரத்தில் பதில் சொல்வதாக கூறிய ஒன்றிய அரசு இன்னும் வாய்திறக்கவில்லை.

 

மேலும், “இதில் 60 கோடி டோஸ் தடுப்பூசிகளை உற்பத்தி செய்தால், 50 கோடி டோஸ் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வாங்க வேண்டுமெனஉத்தரவில் உள்ளது. அப்படி செய்தால் தனியார் கம்பெனிகள் இலாபம் பார்க்க முடியாது. தற்போது தனியாக உண்டு கொழுத்துக் கொண்டிருக்கும் சீரமும், பாரத் பயோடெக்கும், இனி வேட்டையாட முடியாது.

 

அதனால்தான் நானும் செய்யமாட்டேன், நீயும் செய்யக்கூடாது என வக்கிரபுத்தியுடன் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது ஒன்றிய அரசு. கொத்துக்கொத்தாக மக்கள் செத்துக் கொண்டிருக்கும்போதும் மோடி அரசின் இந்த வஞ்சத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதா?

 

தமிழக அரசு இவ்விவகாரத்தில் துரிதமாக செயல்பட வேண்டும். சட்டரீதியாக அணுகுவதுடன், இதை மக்கள் இயக்கமாகவும் மாற்ற வேண்டும். ஆர்.எஸ்.எஸ், பாஜக சங்கிகளின் கயமைத்தனத்திற்கு எதிராக #WeStandWithStalin என ட்ரெண்ட் செய்த தமிழக மக்கள் இதற்கும் கட்டாயம் துணை நிற்பார்கள்.

 

-ஆதிரா

Comments

Popular posts from this blog

உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு. பாகம்_3

இலட்சத்தீவுகள் : குரங்கு கையில் பூமாலை!