சிலி மக்கள் புரட்சி - கம்யூனிசம் 2.0 | கலையரசன்
சிலியில் முதலாளித்துவம் தனது சவக்குழியை தானே தோண்டி விட்டுள்ளது. மீண்டும் உலகெங்கும் செம்புரட்சிகள் உங்களை வரவேற்கின்றன. இது "கம்யூனிசம் 2.0"! தென் அமெரிக்காவில் வளர்ந்து வரும் பொருளாதாரத்தையும், பெருமளவு படித்த மத்தியதர வர்க்க இளம் தலைமுறையினரையும் கொண்டுள்ள சிலி, முன்னொருபோதும் இல்லாதவாறு கலவர பூமியாக காட்சியளிக்கிறது. ஒரு மெட்ரோ ரயில், 16 பேருந்து வண்டிகள் கொழுந்து விட்டு எரிந்தன. பத்துக்கும் குறையாத சூப்பர் மார்க்கெட்கள், மருந்துக் கடைகள் சூறையாடப்பட்டன. கலவரத்திற்குள் அகப்பட்டு பதினொரு பேர் கொல்லப்பட்டனர். சிலி ஜனாதிபதி செபஸ்டியான் பிஞேரா “நாம் ஒரு யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறோம்” என அறிவித்துள்ளார். “ஒரு பலமான, இணக்கமாக போக முடியாத, எவரையும் மதிக்காத, வன்முறை பிரயோகிக்கத் தயங்காத எதிரியுடன்” இந்த யுத்தம் நடப்பதாக தெரிவித்துள்ளார். சிலியில் நடந்த இராணுவ சர்வாதிகார காலகட்டத்திற்குப் (1973 – 1990) பின்னர், முதல் தடவையாக இராணுவம் வீதிகளில் ரோந்து சுற்றுகிறது. தலைநகர் சான்டியாகோ உட்பட எட்டு நகரங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது வரை 1500 பேர் கைது செய்யப்பட்டு...